விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தை வெளியிட தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் சேர்ந்து இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை வெளியிட தடை கோரி அபிராமி மால் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மாமனிதன் படத்தை வெளியிட தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, அபிராமி மால் நிறுவனத்திற்கும் தயாரிப்பு நிறுவனமான ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை.

ஏற்கனவே, எங்களுடன் ஒப்பந்தம் செய்த நிறுவனமான வான்சன் மூவிஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி பணத்தை தராததால்  ஒப்பந்தம் முடிக்கப்பட்டுவிட்டது. எனவே, தடை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: