டெல்லியில் போராடும் விவசாயிகளை தேசவிரோதி என்பவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்: ஆம்ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா ஆவேசம்

புதுடெல்லி: டெல்லியில் போராடும் விவசாயிகளை தேசவிரோதி என்பவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று ஆம்ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா பேசினார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு கடந்த மூன்று வாரமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பலமுறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் சமரசம் ஏற்படவில்லை. விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, சில மத்திய அமைச்சர்கள் இந்த போராட்டத்தை மாவோயிஸ்ட்கள் , இடதுசாரிகள் மற்றும் தேசவிரோத சக்திகள் தூண்டிவிடுகிறார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் அவர்களும் கலந்து விட்டார்கள் என்று தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது,’ சில மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ தலைவர்கள்  சிலர் போராடும் விவசாயிகளை தேசவிரோதிகள் என்று கூறிவருகிறார்கள். நான்  அவர்களை பார்த்து கேட்கிறேன். பல முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு  வீரர்கள், பாடகர்கள், நடிகர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் உள்பட பலர்  விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் போராட்டத்தில்  பங்கெடுத்து வருகிறார்கள். அவர்களும் தேசவிரோதிகளா?’ என்று கேட்டார். இதுபற்றி ஆம்ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா கூறுகையில்,’ நாட்டிற்கே உணவு வழங்கும் விவசாயிகளை சிலர் தேசவிரோதிகள் என்று சிலர் கூறிவருகிறார்கள்.

அப்படி பேசும் அனைவருக்கும் நான் சொல்வது ஒன்றுதான். விவசாயிகளை தேசவிரோதிகள் என்று கூறும் நீங்கள்தான் தேசவிரோதிகள். நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள். இந்தியாவில் உங்களுக்கு இடமில்லை’ என்று தெரிவித்தார்.   

பா.ஜ கருத்து

ஆம்ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதாவின் கருத்துக்கு பா.ஜ பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி பா.ஜசெய்தி தொடர்பாளர் வீரேந்தர் பாப்பர் கூறுகையில்,’ விவசாயிகள் போராட்டத்தின் பங்கேற்ற சிலர் பிரதமரை கொல்ல வேண்டும் என்றும் தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்ட சிலரை விடுவிக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள். அவர்களை சதா எப்படி அழைப்பார் என்று கூறவேண்டும்’ என்றார்.

Related Stories: