காதல் மனைவிக்கு குட்டி தாஜ்மகால்!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

தலைநகர் டெல்லி அருகேயுள்ள ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள தாஜ்மகால் காதல் சின்னம் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். உலக அதிசயங்களில் ஒன்றான இதை முகலாய மன்னன் ஷாஜகான் தன் அன்பு மனைவி மும்தாஜூக்காக பளிங்கு கற்களால் எழுப்பினான். காதலின் சின்னமான தாஜ்மகாலை ேபான்று ஒரு எளிய காதல் மாளிகை உத்தரப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், புலந்தஷாஹர் மாவட்டத்தில் உள்ள கேசர் காலன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பைசுல் ஹாசன் காத்ரி. இவருக்கு வயசு 83.

தபால் நிலைய அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தாஜா முள்ளி. பைசுலுக்கும் தாஜா முள்ளிக்கும் 1953ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை இந்த தள்ளாத வயதிலும் தன் மனைவி மீது அதீத காதல் கொண்டு இருந்தார் பைசுல். இந்த நிலையில் 2011ம் ஆண்டு தாஜா முள்ளி தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எல்லாவிதமான சிகிச்சை அளித்தும் வயோதநிலை காரணமாக தாஜா முள்ளியால் புற்றுநோயை எதிர்த்து போராட முடியவில்லை. பைசுல் ஹாசன் காத்ரி மற்றும் தாஜா முள்ளியின் 58 வருட இல்லற வாழ்க்கை 2011ம் ஆண்டு முற்றுப்புள்ளிக்கு வந்தது.

மனைவி மேல் அதிக காதல் கொண்டு இருந்த பைசுல் அவரின் உடலை தனக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்தார். அடக்கம் செய்த இடத்தில் கல்லறை ஒன்றை கட்ட வேண்டும் என்று இருந்த பைசுல் அங்கு ஒரு குட்டி தாஜ்மகாலை கட்ட முடிவு செய்தார். ஓய்வு பெற்ற அவர் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டு மனைவியை புதைத்த இடத்தில் தாஜ்மகாலை கட்ட ஆயத்தமானார். இதனால் கையில் இருந்த சேமிப்பு கரைந்து போனது. ‘‘ஆரம்பத்தில் என் நிலத்தின் சிறு பகுதியை விற்றேன். அதன் பிறகு மனைவியின் நகை மற்றும் வெள்ளி சாமான்களை விற்றேன்.

இதுவரை 11 லட்சம் செலவாகி இருக்கு. மேலும் மார்பிள் கற்கள் பதிக்கணும். மகாலை சுற்றி தோட்டம் அமைக்கணும், பின்னால் ஒரு தண்ணீர் குளம் அமைக்கணும்’’ என்று சொன்ன பைசுலுக்கு அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்,  நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளார். ஆனா பைசுல் அதை ஏற்க மறுத்துவிட்டார். தன் அன்பு மனைவிக்கு தான் உழைத்து சேமித்த பணத்தில் மகாலை கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 27 அடி உயர கோபுரத்துடன் கூடிய நான்கு தூண்கள் கொண்ட நினைவு சின்னத்தை வெற்றிகரமாக முடிக்கவும் செய்தார்.

‘‘எனக்கும் வயசாகுது. நான் எவ்வளவு காலம் இருப்பேன்னு தெரியல. என் மனைவியின் சமாதியின் பக்கத்திலே எனக்கான சமாதிக்கும் இடம் அமைச்சு இருக்கேன். நான் இறந்த பிறகு என்னை அங்கு புதைக்க என் உறவினர்களிடம் சொல்லி இருக்கேன். ஆனா நான் இறக்கும் முன் இதை முழுமையா கட்டி முடிக்கணும்’’ என்ற பைசுல் இம்மாதம் சாலை விபத்து ஒன்றில் பலியானார். அடிபட்டவரை அவரின் அண்ணன் மகனான முகமது அஸ்லாம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் அவரின் ஆத்மா காதல் மனைவியை தேடி சென்றுவிட்டது.‘‘சித்தப்பா மார்பிள் கல் வாங்க இரண்டு லட்சம் வரை சேமித்து வைத்து இருந்தார். இப்போது அவர் இல்லை. அவரை சித்தியின் சமாதிக்கு அருகில் புதைத்துவிட்டோம். அவரின் கடைசி ஆசைப்படி இந்த தாஜ்மகாலை பிரம்மாண்டமாக கட்டி முடிப்பேன்’’ என்றார் முகமது அஸ்லாம்.

- பா.கோமதி

Related Stories: