போடி அருகே சமுதாயக் கூடங்களில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள்: குழந்தைகள் தெருவில் அமரும் அவலம்

போடி: போடி அருகே, அங்கன்வாடி மையங்களுக்கு கட்டிட வசதி இல்லாததால், சமுதாயக் கூடங்களில் இயங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், குழந்தைகள் தெருவில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

போடி அருகே, மீனாட்சிபுரம் பேரூராட்சி மற்றும் பொட்டல்களத்தில் அங்கன் வாடி மையங்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. இதில், சுமார் 100 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டிடம் இல்லாததால், ஆரம்பத்தில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கி வந்தன.

சரியாக வாடகை தராததால், சில ஆண்டுகளுக்கு முன், மீனாட்சிபுர அங்கன்வாடி மையம் சமுதாயக் கூடத்திலும், பொட்டல்கள அங்கன்வாடி மையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும் மாற்றப்பட்டது. இப்பள்ளிக்கு மைதான வசதி இல்லை என மீண்டும் சமுதாயக் கூடத்திற்கு மாற்றினர். இந்த சமுதாயக் கூடங்களில் இடவசதி இல்லாததால் உணவுப் பொருட்கள் வைக்க முடியவில்லை. இதனால், குழந்தைகளும் தெருவில் அமர்ந்து படிக்கின்றனர்.

இது குறித்து பொட்டல்களம் விவேகானந்தர் இளைஞர் மன்றத்தினர் கூறுகையில், ‘அங்கன்வாடி மையத்திற்கு கட்டிட வசதியில்லை என மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்துள்ளோம். இரண்டு மையங்களுக்கு கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதி ஒதுக்காததால், குழந்தைகள் தெருவில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிர்வாகமும் மீனாட்சிபுரம், பொட்டல்களம்  அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: