மழை நீரை சேமிக்க போதிய கட்டமைப்புகள் இல்லாததால் சென்னையில் ஒரே நாளில் 31 செ.மீ மழை பெய்தும் நீரை சேமிக்க முடியாமல் வீணான அவலம்

* நீர்வழித்தடங்கள் மூலம் 10 டிஎம்சி கடலில் கலப்பு

* மழை நீர் வடிகால்வாய் வழியாக 11 டிஎம்சி நீர் வீண்

* சென்னையின் 2 ஆண்டு குடிநீருக்கான தண்ணீர் வீணானது

சென்னை: மழை நீரை சேமிக்க போதிய கட்டமைப்புகள் இல்லாததால் சென்னையில் ஒரே நாளில் 31 செ.மீ மழை பெய்தும் வீணாகி போய் உள்ளது. நீர்வழித்தடங்கள் மூலம் 10 டிஎம்சி வரை கடலில் கலந்துள்ளது. மேலும், மழை நீர் வடிகால் வழியாகவும் 11 டிஎம்சி நீர் வீணாகி இருப்பதாக நீரியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 26ம் தேதி வரை சென்னை மாவட்டத்தில் 801 மி.மீ, காஞ்சிபுரத்தில் 513 மி.மீ, செங்கல்பட்டு மாவட்டத்தில் 587 மிமீ, திருவள்ளூர் மாவட்டத்தில் 485 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தாம்பரத்தில் 310 மி.மீ, சென்னை டிஜிபி அலுவலகம் 260 மி.மீ, சோழிங்கநல்லூர் 220 மி.மீ, அம்பத்தூர் 150 மி.மீ, தரமணி 100 மி.மீ என சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

கடந்த 2015ல் அதிகபட்சமாக தாம்பரத்தில் 420 மி.மீ வரை மழை பதிவானது. அதன்பிற்கு தற்போது தான் தாம்பரத்தில் 310 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வடகிழக்கு பருவமழை மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பொழிவு இருக்கும் நிலையில், அந்த மழை நீரை சேமிக்க எந்தவித கட்டமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், நீர்வழித்தடங்களில் மழை நீர் வெள்ளமாக ஓடி வீணாக கடலில் கலக்கும் நிலை தான் உள்ளது. சென்னையில், 1,860 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், பாடிகுப்பம் கால்வாய், நந்தனம் கால்வாய் உட்பட, 30 நீர்வழித்தடங்கள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் 129 குளங்கள் உள்ளன. இதைத் தவிர புறநகர் பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகள் உள்ளன. சராசரியை விட கூடுதல் மழை பதிவாகியும், நீர்வழித்தடங்களில், மழைநீர் வெள்ளமாக கடலுக்கு பாய்ந்த நிலையிலும், இந்த நீர்நிலைகளில், 50 சதவீதத்திற்கும் மேல் இன்னும் நிரம்பவில்லை. இதற்கு, மழைநீர் வடிகால்கள் மற்றும் போக்கு கால்வாய், நீர்வரத்து கால்வாய்களை, முறையாக நீர்நிலைகளுடன் இணைக்காதது முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதனாலேயே சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை நீர் வீணாக கடலில் கலந்துள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பெய்த மழையில், 3 டி.எம்.சி., மழைநீர் நிலத்தடி நீராகவும், 8 டி.எம்.சி., மழைநீர் கடலுக்கும் சென்றிருக்கும். சென்னையில் உள்ள நீர் கடத்தும் கால்வாய் பராமரிக்கப்பட்டு இருந்தால் 11 டிஎம்சி தண்ணீர் சேமித்து இருக்கலாம்.இந்த நீரை முறையாக சேமித்திருந்தால், சென்னை மக்களின், 10 மாத நீர் தேவையை பூர்த்தி செய்திருக்க முடியும். சென்னையில், ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 11 டிஎம்சியாகவே உள்ளது. கிடைக்கும் மழைநீரை முறையாக சேமிக்கும் அளவில், போதிய நீர் நிலைகள் இல்லை. மேலும், ஏற்கனவே உள்ள நீர் நிலைகளின், நீர் வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்காததாலும், கொள்ளளவை மேம்படுத்த அக்கறை காட்டா ததாலும், போதிய தடுப்பணை கட்டபடாத நிலையிலும் மழைநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.இதனால், ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகரம் கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடலில் கலந்த செம்பரம்பாக்கம் ஏரி நீர்

24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நேற்று முன்தினம் 22 அடியை எட்டியதை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 12 மணியளவில் 1000 கன அடி திறந்து விட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 9 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் அடையாறு வழியாக வங்களா விரிகுடா கடலில் கலந்தது.

10 டிஎம்சி நீர் கடத்திய கால்வாய்கள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டங்களில் இருந்து, கூவம், அடையாறு

பக்கிங்ஹாம் கால்வாய்  வழியாகவும், நேற்று ஒரு நாளில் 10 டி.எம்.சி., மழைநீர், கடலில் வீணாக  கலந்து இருக்க வாய்ப்புள்ளது என்று நீரியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

3.41 லட்சம் கோடி லிட்டர்தண்ணீர் எங்கே?

சென்னை மாநகர் 426 சதுரகி.மீ  பரப்பளவு கொண்டது. இதில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை 801  மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம், 3 லட்சத்து 41 ஆயிரத்து 226 கோடி  லிட்டர் மழை கிடைத்து இருக்கும். இதன் மூலம், சென்னை மாநகரில் மட்டும் 11  டிஎம்சிக்கும் மேல் நீர் வரை இந்த பரப்பளவில் கிடைத்துள்ளது. மொத்த மழையில்  20 சதவீதம் அளவிற்கு மட்டுமே நிலத்தடி நீராக மாறி இருக்கும். மீதமுள்ள 80  சதவீதம் கடலுக்கு தான் செல்கிறது.

தாம்பரம்‘டாப்’

சென்ைனயில் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் தாம்பரத்தில் மட்டும் 410 மி.மீ.

பதிவானது. 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 310 மி.மீ.மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியது.

சென்னை நீர்வழித்தடங்கள் என்னாச்சு?

சென்னையில் பெய்யும் மழைநீரை கடத்துவதற்காக கூவம் உள்பட 30 கால்வாய்கள் உள்ளன. இவற்றின் நீளம் 1860 கிலோ மீட்டர். மழைநீரை சேமிக்க 129 குளங்கள் உள்ளன. மேலும் சிறியதும் பெரியதுமாக 40 ஏரிகள் உள்ளது.

Related Stories: