கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது: வாரிசு அரசியல் குறித்த அமித்ஷா பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி.!!!

சென்னை: பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், நேற்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், பாஜக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ70 ஆயிரம் கோடி அளவிலான பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி  மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழச்சியில் பேசிய அமித்ஷா, உலகின் மிகவும் தொன்மையான தமிழ் மொழியில் பேச என்னால் முடியவில்லை. எனக்கு தமிழ் தெரியாது. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இந்தியாவில் வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வந்திருக்கிறது. தமிழகத்திலும் அதை நாங்கள் செய்வோம் என்று பேசினார்.

இந்நிலையில், வாரிசு அரசியல் குறித்த அமித்ஷா பேச்சுக்கு திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை-உறவினர்களை-பினாமிகளைக் கொண்டு அரசு கசனாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் - வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.

அவர்கள் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நாட்டை நாசப்படுத்தி - தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி  கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: