வாய்க்கால்களை தூர் வாராததால் 100 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே வாய்க்கால்களை தூர் வாராததால் 100ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குடி, நடராஜபுரம் பகுதியில் அடப்பன் பள்ளம், காங்கிவயல், வண்ணாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் நடவு செய்து 25 நாட்களாகிறது. தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த தொடர் மழையால் உய்யக்கொண்டான் ஆற்றின் வடிகால் பகுதியான அடப்பன்பள்ளம், சிபிஏரியா, காங்கிவயல் பகுதி, வண்ணாங்குளம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல வழியின்றி விவசாய நிலங்களுக்கு புகுந்தது. இதனால் 100 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியுள்ளது.கடந்த 3 நாட்களாக தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘‘வயல்களில் தண்ணீர் புகுந்ததற்கு காரணம் அடப்பன்பள்ளம், ஆனந்தகாவேரி, மாவடியான் குழுமி, காவேரி வடிகால் குழுமி ஆகியவை கடந்த 10 ஆண்டுகளாக தூர் வாரவில்லை.

இப்பகுதி உய்யக்கொண்டான் வாய்க்காலின் கடைமடை பகுதியாகும். திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் எல்லையில் உள்ளதால் இரு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் சிறு மழைக்கே மழைநீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட வயல்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: