காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் 4 வீரர்கள் உட்பட 10 பேர் பலி: பதிலடியில் 8 பாக். வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷமீர், லடாக் யூனியன் பிரதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான்- இந்தியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால், இதை மதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தினமும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில், இந்திய ராணுவ முகாம்களும், எல்லையில் மக்கள் வசிக்கும் குக்கிராமங்களும் குறிவைக்கப்படுகின்றன. இந்தாண்டில் மட்டும் இதுவரையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அத்துமீறல் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இதில், இந்திய வீரர்களும், அப்பாவி மக்களும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு இந்திய ராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் குருஸ் பிரிவு முதல் யுரி வரையிலான பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெறிகொண்டு தாக்குதல் நடத்தியது. இந்திய நிலைகள் மீதும், எல்லையில் உள்ள குக்கிராமங்கள் மீதும் சிறிய ரக குண்டுகள் வீசப்பட்டன.

நவீன துப்பாக்கிகளால் சுடப்பட்டது. இதில், பொதுமக்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள். அதேபோல், எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், 3 ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம்கள், பதுங்கு குழிகள், ஆயுதக்கிடங்குகள் போன்றவை அழிக்கப்பட்டன. எல்லையில் ஊடுருவல் செய்வதற்காக தீவிரவாதிகள் காத்திருக்க கூடிய பதுங்கு அரண்களும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருநாடுகளுக்கும் பயங்கரமாக மோதிக் கொண்ட இந்த சண்டையில், எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் ராக்கெட் மூலம் தகர்த்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தீவிரவாதிகள் 2வது ஊடுருவல் முயற்சி

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரன் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று சந்தேகத்துக்கிடமான ஆள் நடமாட்டம் இருந்ததை இந்திய ராணுவத்தினர் கவனித்தனர். தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நடப்பதை உணர்ந்த இந்திய வீரர்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது, கடந்த ஒரு வாரத்தில் தீவிரவாதிகள் செய்யும் 2வது ஊருவல் முயற்சியாகும். கடந்த 7ம் தேதி மச்சில் பகுதியில் நடந்த ஊடுருவல் முயற்சியில் 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.

Related Stories: