கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு  மூடி வைத்தால் 15 நிமிடத்தில் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவே குழையாது. ஒன்றோடு ஒட்டாமல் ஜமாய்க்கும்.

* சுண்டல் தாளித்த கையோடு ரெடிமேட் புளியோதரைப் பொடியை தூவி  இறக்கினால் சுண்டல் சூப்பராக இருக்கும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* சிறிது பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து சாம்பார் பொடியுடன் சேர்த்தால் சாம்பார் சூப்பராக இருக்கும்.

* சாம்பாரில் காய்களுடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் கட் பண்ணிப் போட்டு சமைத்துப் பாருங்கள். கல்யாண சாம்பாரையும் மிஞ்சி விடும் சுவை.  சத்தானதும் கூட.

* சாறு பிழிந்த எலுமிச்சைப் பழத்தோலைத் தூக்கி எறிந்து விடாமல், உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அதோடு சேர்த்து வேக வையுங்கள்.  உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.

- கவிதா சரவணன், திருச்சி.

* கீரைகளை மூடி போட்டு வேகவிடக் கூடாது. வெண்ணெய் அல்லது சர்க்கரை சேர்த்தால் பச்சை நிறம் மாறாது.

* சூடான சமையல்களில் எலுமிச்சைச்சாறு பிழியக் கூடாது. சற்று ஆறியவுடன் பிழியவும்.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகம் கொதிக்கக் கூடாது.

- மாலதி நாராயணன், சென்னை-87.

* எந்தவித ஊறுகாய் தயாரித்தாலும் கடுகு போடுவதற்கு பதில் சிறிதளவு சோம்பை தாளித்து சேர்த்தால் ஊறுகாய் சுவையாக இருக்கும்.

* இட்லி செய்ய அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் இட்லி பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

* தயிர் வடை செய்யும்போது வடையை பொரித்து சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

- அ.சித்ரா, காஞ்சிபுரம்.

* புதினா அதிகம் கிடைக்கும் நேரத்தில் சுத்தம் செய்து காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையான பொழுது கொதிக்கும் டீயில் 1/2  டீஸ்பூன் இந்தப் பொடியை சேர்த்து பின்பு பால் சேர்த்து வடித்தால் சுவையான மின்ட் டீ கிடைக்கும். அதே போல் 1 டம்ளர் சுடுநீரில் 1/2 டீஸ்பூன்  சேர்த்து வாய் கொப்புளித்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

* தேங்காய் சாதம் செய்யும்போது கொஞ்சம் பாதாம், முந்திரியை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடித்து சேர்த்து, 1/2 டீஸ்பூன் சர்க்கரையும்  சேர்த்து கிளறினால் வாசனையும், சுவையும் கூடுதலாக கிடைக்கும்.

- எஸ்.மீனாட்சி, வேலூர்

Related Stories: