திருவொற்றியூரில் 2-வது நாளாக வேல் யாத்திரை தொடங்க முயற்சி: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் மூத்த தலைவர்கள் கைது.!!!

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் 2-வது நாளாக வேல் யாத்திரை தொடங்க முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து தற்போது, இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் முகக்கவசம் அணிய  வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாஜ மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.  

இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, பாஜ நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி தரப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் வேல் யாத்திரையை திருத்தணி முருகன் கோயிலில் இருந்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கினார். இருப்பினும், போலீசார் பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், இன்று 2-வது நாளாக வெற்றி வேல் யாத்திரை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் வேல் யாத்திரை தொடங்கினர். அப்போது போலீசார் யாத்திரையை தடுத்து நிறுத்தினர். யாத்திரையில் பங்கேற்ற எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், சி.பி ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

யாத்திரைக்கு முன்பு தொண்டர்களிடையே பேசிய எல்.முருகன், எத்தனை தடைகள் வந்ததாலும் வேல் யாத்திரை வெற்றி அடையும் என்றும், அனைத்து ஊர்களிலும் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று யாத்திரை நிறைவடையும் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் வரும் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக இருக்கப்போகிறது. அடுத்து அமைய உள்ள ஆட்சியை தீர்மானிக்கப் போவது பாஜகதான் என்றும் எல்.முருகன் கூறினார்.

Related Stories: