நொளம்பூரில் ரூ2 கோடியில் வட்டாட்சியர் அலுவலக கட்டடம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மதுரவாயல் வட்டம், நொளம்பூரில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் வாணியம்பாடியில் 20 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் மதுரை, டாக்டர் தங்கராஜ் சாலையில் அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், துயிற்கூடங்கள், சமையலறை, வகுப்பறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: