மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாயில் உள்ள கான்கிரீட் தளத்தால் வெள்ள பாதிப்பு அபாயம்: உடனே அகற்ற வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தால், பருவமழை காலத்தில், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை, உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கிய தடமாக உள்ளது. இச்சாலையில் பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் நடுவே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட மேம்பால பணி, கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது. ஓராண்டை கடந்த பிறகும், இந்த பாலம் முறையாக திறக்கவில்லை. ஆனால், பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையில், கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையால், பங்கிங்காம் கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, பாலத்தின் அடிப்பகுதியில் இருபுறமும் மண் சரிந்தது. இதையடுத்து, மண் சரியாமல் இருக்க, கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

தற்போது, பருவ மழை துவங்கியுள்ளதால், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக பெருக்கெடுத்து ஓடும். அப்போது, பாலத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தால், தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்படும். தண்ணீர் சமமாக செல்லாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக தலையிட்டு கால்வாய் நடுவே அமைக்கப்பட்ட  கான்கிரீட் தளத்தை அகற்றி, பாலத்தின் பக்கவாட்டு பகுதியை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: