சித்த மருத்துவத்தை ஏன் ஊக்கப்படுத்தக்கூடாது? கொரோனா மருந்தாக இதுவரை கபசுரகுடிநீரை அறிவிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கபசுர குடிநீரை ஏன் கொரோனாவுக்கான மருந்தாக இதுவரை அறிவிக்கவில்லை என மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொரோனாவை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற சித்த மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இதை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மத்திய சுகாதாரத்துறை செயலர், மத்திய சித்தா மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை உடனடியாக பரிசோதித்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ‘‘மத்திய, மாநில அரசுகள் சித்த மருத்துவ பிரிவுக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது. ஆனால், இவற்றின் மூலம் ஏதேனும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா’’ என்றனர். மத்திய அரசு தரப்பில், ‘‘தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் கபசுரக்குடிநீர் மருந்தாக வழங்கப்படுகிறது’’ என கூறப்பட்டது. ‘‘அப்படியானால், கபசுரக்குடிநீரை ஏன் கொரோனாவிற்கான மருந்தாக இதுவரை அறிவிக்கவில்லை’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசு தரப்பில், ‘‘சில விதிமுறைப்படி மேலும் சில ஆய்வுகளுக்கு பிறகே அதுகுறித்து அறிவிக்கப்படும். கொரோனா தொற்றில்லாதவர்கள் கபசுர குடிநீர் பயன்படுத்தவும், பாதிப்பு ஏற்பட்டால் முதல்கட்டமாக கபசுர குடிநீருடன், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘எப்போது முதல் கபசுர குடிநீர் குறித்த ஆய்வுகள் நடக்கிறது? எத்தனை பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், எத்தனை பேர் குணமடைந்தனர்.

நோய் எதிர்ப்பு மருந்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி செலவிடும்போது, ஏன் இதுபோன்ற சித்த மருந்துகளை ஊக்கப்படுத்தக்கூடாது’’ என்றனர். பின்னர், ‘‘சித்த மருந்துகள் தொடர்பாக இதுவரை எத்தனை ஆய்வுகள் நடந்துள்ளது? இதில், எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இவை எந்தவிதமான நோய்களை குணப்படுத்தக்கூடியது என்பது குறித்தும், எந்த ஆராய்ச்சி முடிவின் கீழ் கபசுரக்குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறித்தும் மத்திய அரசு தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை நவ. 10க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: