தற்போது இருப்பது நாடாளுமன்ற கூட்டணி: சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்கப்படும்...பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.!!!

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி மாறலாம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அதிமுக ஆட்சி அமைத்தது. தற்போதைய ஆட்சியின் காலம் வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளது. இருப்பினும்,  சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, தமிழகத்தில் 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை  அறிவிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அதிமுக முதல்வர்  வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட  வழிகாட்டு குழு அமைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற தேர்தல்  நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என தெரிவித்தார். இப்போது அமைக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. சட்டமன்ற  தேர்தலுக்கான கூட்டணி இனி அமைக்கப்படும். வரும் காலங்களில் கூட்டணி அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம்; இரண்டு கட்சியும் இல்லாமல் கூட  இருக்கலாம் என்றார். நாங்களே கூட்டணி அமைக்கலாம். யார்வுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணி  உடன்பாட்டிற்கு பிறகு அறிவிக்க வேண்டிய விஷயம் என்றார். பொன்.ராதாகிருஷ்ணின் கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, அதிமுகவுடன் கூட்டணியில் சமக, பாஜக, பாமக, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. நடந்து முடிந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: