நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு தொடங்கியது: சென்னையில் மட்டும் 22,000 பேர் எழுதுகின்றனர்.!!!

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்ஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு தொடங்கியது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும்  ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 12ம் தேதி அறிவித்தது. மார்ச் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க கால  அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில், சுமார் 4 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 62 மையங்களில் சுமார் 22  ஆயிரம் பேர் எழுதுகின்றனர். கடந்த மே 31-ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு  தொடங்கியது. இந்தியா முழுவதும் சுமார் 4 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

இந்தியா முழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு  தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடக்கிறது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்காக சென்னையில் காலை 6  முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: