புதிய பாராளுமன்றம் கட்டும் பணி ஒப்பந்தம்..!! ரூ. 861.90 கோடிக்கு ஏலம் எடுத்தது டாடா நிறுவனம்; விரைவில் பணி தொடக்கம்

டெல்லி: புதிய பாராளுமன்றம் கட்டும் பணியை டாடா நிறுவனம் ரூ. 861.90 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. டெல்லியில் சவுத் பிளாக்கிற்கு அருகே சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படும் பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், அரசு துறைகளுக்கான 8 கட்டிடங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகளை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்பகுதியில் அசோகச் சின்னம் நிறுவப்பட உள்ளது.

வரும் 2026’ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்னிக்கை மறுவரையரை செய்யப்படும் போது, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போதே பாராளுமன்றம் இட நெருக்கடியால் அவதிப்படும் நிலையில், வரும் காலத்தையும் மனதில் கொண்டு புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெல்லியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியது.

இந்தப் பணி ஒப்பந்தத்தைப் பெற 7 நிறுவனங்கள் விண்ணப்பித்ததில் நிதி முறையிலான டெண்டருக்கு டாட்டா, எல் அண்டு டி, சபூர்ஜி பலோன்ஜி கம்பெனி ஆகிய 3 நிறுவனங்கள் தகுதிபெற்றன. அவற்றின் விண்ணப்பங்களை மத்தியப் பொதுப்பணித் துறை இன்று பிரித்துப் பார்த்தது. அதில் 861 கோடியே 90 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்த டாட்டா நிறுவனத்துக்குக் கட்டிடப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. எல் அண்டு டி நிறுவனம் 865 கோடி ரூபாய்க்குப் பணி ஒப்பந்தத்தைக் கேட்டிருந்தது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுற்றதும் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

Related Stories: