சேலத்தில் தனியார் குளிர் பதன கிடங்கில் அமோனியம் கசிவு : மக்கள் பீதி

சேலம்:  சேலத்தில் தனியார் குளிர் பதன கிடங்கில் அமோனியம் வாயு வெறியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குளிர் பதன கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. இந்த கிடங்கில் 6 ஆயிரம் டன் அளவிற்கு தானியங்கள், பூ வகைகள் பதப்படுத்தி வைக்கப்படுகின்றன.

இதனை குளிரூட்ட ஆயிரம் கிலோ அமோனியம் வாயு தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் குளிரூட்டும் இயந்திரத்தில் ஆயில் மாற்றும்போது அமோனியம் வாயு உள்ள சிலிண்டரில் உள்ள வால்வு லேசாக திறந்துகொண்டதால், சிலிண்டரிலிருந்து வாயு திடீரென வெறியேறியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் 20 பேர் அங்கிருந்து வேகமாக வெளியேறினர்.

இந்த செய்தி காட்டுத்தீபோல் பரவியதால் பொதுமக்கள் அனைவரும் பீதியடைந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவலானது அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அமோனியம் வாயு வெளியேறும் சிலிண்டரின் வால்வை மூடினர்.

இதனால் பெரிய அளவில் நடக்கவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதற்கிடையில் லெபனானில் வெடித்து சிதறிய அமோனியம் நைட்ரேட்டால் ஏராளமானோர் பலியாகினர். இதனைத்தொடர்ந்து சென்னை மணலி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 700 டன் அமோனியம் நைட்ரேட்டானது ஐதராபாத்திற்கு இடமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: