தூதரகம் மூலமாக தங்கம் கடத்திய வழக்கு கேரள முதல்வர் பினராயுடன் சொப்னாவுக்கு நேரடி பழக்கம்: நீதிமன்றத்தில் என்ஐஏ அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரம்: சொப்னாவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நேரடியாக பழக்கம் இருந்தது என கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் சிறப்பு வக்கீல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 2 முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, என்ஐஏ தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் விஜயகுமார், ‘‘சொப்னாவுக்கு கேரள முதல்வர் அலுவலகம், ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மற்றும் போலீசில் பெரும் செல்வாக்கு இருந்தது. முதல்வர் பினராய் விஜயனிடம் நேரடி பழக்கமும் இருந்தது.

இது சாதாரண பழக்கமாகவோ அசாதாரண பழக்கமாகவோ இருக்கலாம். எனவே, இவரை ஜாமீனில் விடுவித்தால், தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உண்டு. சொப்னாவுக்கு சிவசங்கர் வழிகாட்டி போல செயல்பட்டுள்ளார். அரசின் ஐடி துறை விண்வெளி பூங்காவில் சிவசங்கர்தான் அவருக்கு வேலை வாங்கி கொடுத்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் அடங்கிய பார்சலை சுங்க இலாகா பிடித்தபோது அதை விடுவிக்க சொப்னா கோரியும் சுங்க இலாகா மறுத்ததால் சிவசங்கரை சந்தித்து விடுவிக்க கூறுமாறு வலியுறுத்தினார். அவர் சுங்க இலாகாவை தொடர்பு கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்று வாதிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட சொப்னா தரப்பு வக்கீல், ‘‘இதை பொருளாதார குற்றமாகவே கருத வேண்டும். இதில், தீவிரவாதிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கை சுங்க இலாகா, அமலாக்கத்துறை, சிபிஐ  ஆகியவை விசாரிக்கின்றன. ஆனால், தீவிரவாத தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. சொப்னாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ கூறிய நகைகள் அவருக்கு திருமணத்தின்போது கிடைத்தவை. அவர் திருமணத்தில் 5 கிலோ நகை அணிந்திருந்தார்.

திருமண போட்டோ சமர்ப்பிக்கப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை 10ம் தேதி தெரிவிப்பதாக கூறினார். தொடக்கத்தில் இருந்தே சொப்னாவுடன் தனக்கு எந்த பழக்கமும் இல்லை என்று பினராய் விஜயன் கூறி வந்தார். இந்த நிலையில், பினராய் விஜயனிடம் சொப்னாவிற்கு நேரடி பழக்கம் இருந்தது என்று நீதிமன்றத்தில் என்ஐஏ கூறியுள்ளது அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  

* 2 அமைச்சர்களுக்கு சிக்கல்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியுறவுத்துறை சட்டத்தை மீறி 2 அமைச்சர்கள் அடிக்கடி சென்றது குறித்து மத்திய அரசு விசாரணை தொடங்கியுள்ளது. சுங்க இலாகா சார்பில் மத்திய அரசுக்கு அமைச்சர் ஜலீலுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ‘தூதரகத்தில் இருந்து நேரடியாக எந்த பொருட்களையும் பெறக்கூடாது என்ற நிலையில் அமைச்சர் ஜலீலின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சகம், பயிற்சித்துறைக்கு மதநூல்கள் தூதரகத்தில் இருந்து வாங்கியதாக அவரே குறிப்பிட்டுள்ளார். இந்த மதநூல்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கேரளாவில் பல பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளன.  

இது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அமீரக தூதரகத்திடம் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு அமைச்சர் மீதும் பிடி இறுகுகிறது. இவரை தனக்கு நேரடியாக தெரியும் என கைது செய்யப்பட்ட ஒருவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சொப்னா கும்பலுக்கு ஆப்ரிக்க நாட்டு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. வழக்கில் முக்கிய குற்றவாளியான ரமீஸ் அடிக்கடி ஆப்பிரிக்க நாடான தான்சானியா சென்று வந்துள்ளார். அங்கிருந்து பல ெபாருட்களை இறக்குமதி செய்துள்ளார். இவருக்கு ஆப்பிரிக்க போதை பொருள் கும்பலோடு தொடர்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Related Stories: