ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்..!! 2 இளைஞர்களை கயிறு கட்டி மீட்ட ஊர் மக்கள்!!!

அனந்தபுரம்:  ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து 2 இளைஞர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காண்போரை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சியை அங்குள்ளவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவின் சில பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது கடப்பாவை சேந்த ராக்கேஷ் மற்றும் யுஷப் என்ற இரு இளைஞர்கள் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அனந்தபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பூட்டி என்ற இடத்தில் காட்டாற்றை கடந்து சென்ற பேருந்தை தொடர்ந்து இவர்களும் தங்களது காரை செலுத்தினர். ஆனால் அப்போது வெள்ளத்தில் சிக்கி கார் அடித்துச்செல்லப்பட்டது.

நல்வாய்ப்பாக அந்த கார் சிறிது தூரம் மூழ்காமல் தண்ணீரில் மிதப்படியே சென்றது. அப்போது துரிதமாக செயல்பட்ட அப்பகுதி கிராம இளைஞர்கள் சிலர் அந்த காட்டாற்றில் இறங்கி கயிறு மூலம் 2 இளைஞர்களையும் பத்திரமாக மீட்டனர். ஆனால் தண்ணீரின் சீற்றத்தால் காரை மீட்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர், சிறிது நேரத்தில் அந்த கார் வெள்ளத்தில் மூழ்கியபடி அடித்துச் செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காட்டாற்றில் போராடி இளைஞர்களை மீட்டதால் அந்த கிராம இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories: