போலீசாரை தாக்க பதுக்கிய வெடிகுண்டுகள் பறிமுதல் ஆந்திராவில் 13 மாவோயிஸ்ட்கள் சரண்: வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை

திருமலை: ஆந்திராவில் போலீசாரை தாக்க பூமிக்கடியில் புதைத்திருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று 13 மாவோவாயிஸ்ட்கள் அல்லூரி சீதா ராமராஜு மாவட்ட எஸ்பி முன்னிலையில் சரணடைந்தனர்.
ஆந்திராவில் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்த நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திரா-ஒடிசா எல்லையில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அல்லூரி சீதா ராமராஜு மாவட்டத்தில் பனசலா பந்தா வனப்பகுதியில் போலீசார் சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். அப்போது, வனப்பகுதியில் ஓரிடத்தில் பூமியின் மேடான பகுதியை சந்தேகத்தின்பேரில் தோண்டிப்பார்த்தனர். அதில், 6 ஸ்டீல் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, 2 கண்ணி வெடிகுண்டுகள், 150 மீட்டர் மின்ஒயர்கள், 5 கிலோ ஆணிகள் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் புரட்சி இலக்கிய புத்தகம் இருந்தது. இதையடுத்து போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் மாவட்ட எஸ்பி துஹின்சின்ஹா கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு ஒடிசா- ஆந்திரா எல்லையில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்து போலீசார் சார்பில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் வனப்பகுதியில் பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். அந்த வெடிகுண்டுகள் போலீசார் மீது தாக்குதல் நடத்த பதுக்கி வைத்துள்ளனர். வெடிபொருட்களை மாவோயிஸ்ட்கள் பதுக்கி வைக்க உதவியாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மாவட்டத்தில் போலீசார் எடுத்து வரும் நடவடிக்கையால் மாவோயிஸ்ட்களுக்கான ஆதரவு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மாவோயிஸ்ட்கள் சரணடைந்தால் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி சமூகத்தில் சகஜமான வாழ்க்கை வாழ உரிய ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்று நேற்று மாவோயிஸ்ட் கட்சியின் பெத்தபயலு தளத்தைச் சேர்ந்த 13 போராளிகள் அல்லூரி சீதா மாவட்ட எஸ்பி துஹின் சின்ஹா முன்னிலையில் சரணடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

The post போலீசாரை தாக்க பதுக்கிய வெடிகுண்டுகள் பறிமுதல் ஆந்திராவில் 13 மாவோயிஸ்ட்கள் சரண்: வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: