சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு சட்டமானால் தமிழகம் சுடுகாடாக மாறும்: தமிழக அரசு தடுத்து நிறுத்த கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020, தொழிற்சாலைகளுக்கு ஆதரவாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் மாறும். தனியார் திட்டங்களுக்காக விவசாயிகள் மற்றும் தனியார் நிலத்தை அபகரிக்க மட்டுமே உதவும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. இந்த வரைவு, உண்மையிலேயே தமிழகத்தை தாக்கத் தான் வருகிறது என்பது உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்த பதிலில் தெளிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் மிருகபல மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு, மக்களிடம் எந்த கலந்துரையாடலும் நடத்தாமல் சட்டத்தை நிறைவேற்ற முனைவது ஜனநாயக விரோதச் செயலாகும்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வரைவு அறிக்கை மக்களின் பங்களிப்பை முற்றிலும் நிராகரிக்கிறது. இந்த வரைவு அறிக்கை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு சுடுகாடாக ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதை கடுமையாக அனைத்து கட்சிகளும் எதிர்த்தாலும், இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு இருக்கிறது. இதனை முதல்வர் உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டும். விவசாயிகளை அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டுகின்றேன்.

Related Stories: