3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாறுவார்கள், 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தயார் : குடியரசு தலைவர் உரையின் ஹைலைட்ஸ்

டெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையற்றினார். மக்களவையில் புதிதாக தேர்வான எம்பிக்கள் தற்போது பதவியேற்ற நிலையில் கூட்டு கூட்டத்தில் திரெளபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு..

*மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர்.2024 தேர்தலில் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

*பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.(பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்ததாக குடியரசுத் தலைவர் கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.)

*உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15%ஆக உள்ளது. கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.Reform, perform, transform சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருகிறது.உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.

*இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்.மேலும் பல சீர்திருத்தங்கள் கொண்ட பட்ஜெட் அறிமுகம் செய்யப்படுவதை எதிர்பார்க்கலாம்.மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

*உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. “பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ. 3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

*உலக சந்தையில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்களை ஊக்கப்படுத்த ஸ்ரீ அன்ன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வந்தே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தொலை தொடர்பு வசதி மற்றும் இணைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

*அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

*3வது ஆட்சிக்காலத்தில் மேலும் 3 கோடி இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் வருவாயை அதிகரிக்கவும், அவர்களின் மரியாதையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது.பின் தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பிரதமரின் ஜன் மன் திட்டத்தின் மூலம் ரூ. 24,000 செலவழிக்கப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் திட்டம் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

*இந்தியாவில் பாதுகாப்புக்கு தேவையான போர் தளவாடங்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தை செயல்படுத்தி வருகிறோம். பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது. ராணுவத்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

*ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் தொழில்துறை பலன் அடைந்துள்ளது.கடந்த ஏப்ரலில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்துள்ளது. 55 கோடி மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

*2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தயாராக உள்ளோம். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கும் செயலில் ஈடுபடக்கூடாது; வதந்திகளை பரப்பக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குலைக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது.

*ஜூலை முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரும். இனி தண்டனை அல்ல; புதிய சட்டங்கள் மூலம் நியாயம் கிடைக்கும். நாடு சுதந்திரத்திற்கு பின் செய்திருக்க வேண்டிய புதிய குற்றவியல் சட்டத்தை அரசு தற்போது செய்துள்ளது.

*சந்திரயான் திட்டம் குறித்து தேசம் பெருமை கொள்ள வேண்டும். கொரோனா, பூகம்பம், போர் சூழல்கள் போன்ற எந்த ஒரு சோகமாக இருந்தாலும், மனித குலத்தை காப்பாற்றுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

*டிஜிட்டல் இந்தியா” வின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் வலுவாகவும், லாபகரமாகவும் செயல்படுகின்றன. பழங்குடியின மக்களின் நலனை மேம்படுத்த ரூ. 24,000 கோடி மதிப்பில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

*காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் உள்ளிட்ட கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளை அரசு தொடங்கியுள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

*மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம் மூலம் கல்வித்துறையில் சீரமைப்பு. டிஜிட்டல் பல்கலைக்கழகங்களை உருவாக்கவும் மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருகிறது.

*வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் லட்சியமும் உறுதியும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

The post 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாறுவார்கள், 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தயார் : குடியரசு தலைவர் உரையின் ஹைலைட்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: