நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திரா காந்தியின் பெருமையை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலும் தேசிய ஒற்றுமை பயணங்களை மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி, பிரச்னைகளை புரிந்து கொண்டு அதற்காக குரல் கொடுத்து மக்கள் தலைவராக உயர்ந்து நின்ற தலைவர் ராகுல்காந்தி மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இன்று பொறுப்பேற்பது நாட்டு மக்களிடையே மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்கியிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை முதன்முறையாக ராகுல்காந்தி பெற இருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜிவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை அரைவேக்காடு அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படிதான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததின் மூலம் ஜனநாயகத்தை உலகத்திற்கு நிரூபித்தார். எந்த நிலையிலும் எவருக்கும் அஞ்சாமல் விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

The post நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திரா காந்தியின் பெருமையை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: