விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக, பாமக உள்பட 29 வேட்பாளர்கள் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி திமுக, பாமக, நாதக உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம்தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம்தேதி தொடங்கி 21ம்தேதி வரை நடைபெற்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா(எ) சிவசண்முகமும், பாமக சார்பில் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் உள்பட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் கடந்த 24ம்தேதி வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாதக உள்ளிட்ட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்ப பெற நேற்று மாலை வரை நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட 29 பேரில் யாரும் மனுவை திரும்ப பெறாததால் 29 வேட்பாளர்களும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியானது. வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக நேற்று மாலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பழனி, விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், நாதகவுக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டது. விக்கிரவாண்டியில் மொத்தம் 275 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குசாவடிக்கு 2 வாக்குப்பதிவு இயந்திரம் என 275 வாக்குச்சாவடிக்கு 550 வாக்குப்பதிவு இயந்திரம் தாலுகா அலுவலகத்தின் மேல்தளத்தில் தயார் நிலையில் உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 6 பதற்றமான வாக்குச்சாவடிகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக, பாமக உள்பட 29 வேட்பாளர்கள் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: