இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள் : சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உருக்கம்

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கைகளுக்கு பதிலுரை அளித்த அமைச்சர் சேகர் பாபு, “தமிழகம் முழுவதும் ஒரு காலை பூஜை திட்டத்தில் உள்ள 17 ஆயிரம் கோயில்களின் வைப்புத்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும். மேலும் ஆயிரம் கோயில்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த கோயில்களில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் உதவித்துறை ரூ.1000, மேலும் புதிதாக சேர்க்கப்படும் ஆயிரம் கோயில்களுக்கும் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார். மேலும் இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். தமிழ்நாட்டில், ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் திருக்கோயில்கள் அதிகம் உள்ளன. அதற்கு காரணம் நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை.எந்த மதமாக இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம். கடவுளை கோயில் வைத்து வணங்கலாம், பிரசாரத்திற்கு அழைத்து வராதீர்கள். இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள்.

உலகத்திற்கே பொது மறையும், பொது நீதியும் வழங்கிய அன்னைத் தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும்.மனித நேயம் ஒருபோதும் இம்மண்ணை விட்டு அகலாது. அறநிலையத்துறையே இருக்காது என்றவர்களின் எந்த அதிகாரமும் இங்கு செல்லாது. நதிகள் முன்னேதான் செல்லும், பின் வந்ததில்லை. அதுபோல முதலமைச்சர் லட்சியத்தின் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை.” இவ்வாறு தெரிவித்தார்.

The post இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள் : சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: