தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து...! தூய்மைப்பணி உபகரணங்கள் எரிந்து சேதம்!!!

தேனி: தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தூய்மைப்பணி உபகரணங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மறுசுழற்சி மருந்துகள் மற்றும் தூய்மைப்பணி உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும், தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தானது தூய்மைப்பணியாளர்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள பொருட்கள் மட்டுமே எரிந்து நாசமடைந்துள்ளன. இதில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கும் விடுதிக்கு அருகிலேயே கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெற்று வருவதால், தீயானது மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல், தீயணைப்பு வீரர்கள் போராடி உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, திடீர் தீ விபத்தானது மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: