பொய்களை அடிக்கடி கூறி வரும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும்: கவர்னர் கிரண்பேடி ஆவேசம்

புதுச்சேரி:  புதுவையில் சில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் அடிக்கடி பொய்களை கூறிவருவதால் அவர்கள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டுமென கவர்னர் கிரண்பேடி காட்டமாக பதிவிட்டுள்ளார். புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அங்கிருந்த அதிகாரிகளிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டார். தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். இது சுகாதாரத்துறை ஊழியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்று இரண்டு மணி நேரம் பணிகளை புறக்கணித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இப்பிரச்னை நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கவர்னர் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். மேலும் அவருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, மருத்துவர்கள் மனம் புண்படும்படி யாரும் நடந்து கொள்ளக்கூடாது. கவர்னர் தன்  செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார். சட்டசபையில் விவாதத்தில் பங்கேற்ற ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் கிரண்பேடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து, கிரண்பேடி வாட்ஸ் அப் பதிவில் கூறியிருப்பதாவது: சரியான முறையில் செயல்

படாத, மருத்துவர்களை தூக்கிலிடப்பட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கூறியது கண்டிக்கத்தக்கது என ஜெயமூர்த்தி எம்எல்ஏ பேசியுள்ளார்.  

உண்மையில் இது 100 சதவீதம் பொய்யானது. அவர் மேலும் கூறுகையில் அரசாங்க ஊழியர்கள் தங்கள் சம்பளத்தைப் பெற முடியாது என துணை நிலை அறிக்கை வெளியிட்டிருப்பது, அதிகார தோரணையைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதனை முற்றிலும்  இப்படியே நிறுத்தி வைக்க விரும்புகிறேன். இதற்கான  நேரம் இதுவல்ல. மக்களின் சுகாதார பாதுகாப்பு, அனைவரின் நலனுக்கும் முன்னுரிமை தரவே விரும்புகிறேன். பஞ்சாபில் உள்ள எனது வீட்டுக்கான வாடகையை செலுத்தவில்லை என்றும் 420 பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுவும் 100 சதவீதம் பொய்யானது. வீட்டு உரிமையாளர் வங்கி கணக்கில் வாடகை பணம் செலுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் சிலர் தினமும் தவறாக வழிநடத்துகிறார்கள். பொய்களை திரும்ப, திரும்ப கூறுகிறார்கள். இதற்கான காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜ்நிவாஸை அவர்கள்  விருப்பத்துக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்க நிர்பந்தப்படுத்த முடியாது. இது அவர்கள் தேவையாகவும் இருக்கிறது. பொய்களைக் கூறும்போது மறுக்கப்படுகிறது. எனவே அடிக்கடி பொய்களையே கூறுகின்றனர். எனவே ஒரு மனநல மருத்துவரை சந்தித்து  ஆலோசனை பெற வேண்டும். அவர்களுக்கு இந்த உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: