சுகாதாரத்துறை ஊழியர்களை தரக்குறைவாக பேசியதை கண்டித்து புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போராட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை ஆளுநர் கிரண்பேடி தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனை முன்பாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அயராது உழைத்து வருகின்றனர். இச்சமயத்தில் கடந்த 18ம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று கொரோனா விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அதிகாரிகளை சரமாரியாகத் திட்டினார்.

கொரோனா காலத்தில்  உயிரையும் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அவமானப்படுத்தும் விதமாக அவருடைய பேச்சு இருந்தது. இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் மனசுமையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என குறிப்பிட்டார். போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவை பாதிக்கப்பட்டது. அரசு ஊழியருக்கான சம்பளம், ஓய்வூதியம் வழங்குவது அடுத்தமாதம் முதல் பாதிக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்து ஆடியோ பதிவு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: