கம்பம் அருகே தடுப்பணைக்கு எதிர்ப்பு கிளம்பிய இடத்தில் மதுரை அதிகாரிகள் ரகசிய ஆய்வு

கூடலூர்: மதுரைக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்காக கம்பம் அருகே தடுப்பணை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்தில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ரகசிய ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முல்லைப் பெரியாற்று தண்ணீரை ரூ.1,295 கோடி செலவில் மதுரைக்கு குழாய் மூலம் கொண்டு செல்ல சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் புதிய தடுப்பணை கட்டி தண்ணீர் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் புதிய தடுப்பணை கட்ட, கம்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடிநீர் பிரச்னை ஏற்படும் என புகார் தெரிவித்தனர். எனவே, லோயர்கேம்ப் குருவனூற்று பாலம் அருகில் பெரியாற்றில் தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை மாநகராட்சி கட்டுமானப்பிரிவு பொறியாளர் தலைமையிலான 3 பேர் குழு கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் மீண்டும் ஆய்வு செய்தனர். ரகசியமாக நடந்த இந்த ஆய்வில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் யாரும் உடன் வரவில்லை. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்தில் மீண்டும் அதிகாரிகள் ரகசிய ஆய்வு செய்தது கம்பம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: