ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர் செய்தது சேலம் விவசாயியின் மகன்: நண்பர்கள், கிராம மக்கள் பெருமிதம்

உத்தரபிரதேசத்தை கலங்கடித்த ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டரில் வேட்டையாட மூளையாக இருந்தவர் எஸ்பி தினேஷ்குமார் (34). தமிழகத்தின் சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, எஸ்.பி.யாக உயர்ந்து தற்போது இந்திய காவல் துறையின் பெருமைக்கு மேலும் மகுடம் சூட்டியுள்ளார். பிரபு, சுமித்ரா என்ற விவசாய தம்பதிகளின் ஒரே மகன். பிளஸ் 2 முடித்தவுடன் கால்நடை மருத்துவராக  வேண்டும் என்பது இவரது இலக்கு. அதற்கு வாய்ப்பு கிடைக்காததால் கோவை வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண்மை படித்து முடித்தார். இதையடுத்து சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேசிய அளவில் 345வது ரேங்க் பெற்றார். உத்தரபிரதேச மாநிலத்தில் 2009ம் ஆண்டில் ஏஎஸ்பி பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அங்குள்ள செகன்பூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் கான்பூர் எஸ்பியாக பொறுப்பேற்றார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், அனீஷ்கார்த்திக் (2) என்ற மகனும் உள்ளனர்.   கான்பூர் எஸ்பியாக பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் காவல்துறையை கலங்கடித்த ரவுடி, இவரது அதிரடிக்கு பலியானது சினிமாவை மிஞ்சும் திகில் நிறைந்தது என்கின்றனர் அவரது போலீஸ் நண்பர்கள். எஸ்பியாக கான்பூர் சென்றதும் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்த போலீசாரை பட்டியல் எடுத்து நடவடிக்கைக்கு உட்படுத்தினார். ஒரு கட்டத்தில் ரவுடிகளுக்கு ஆதரவாக இருந்த டிஎஸ்பிக்கள் கிருஷ்ணகுமார், கன்வர்பால் ஆகியோரை இடமாற்றம் செய்தார்.

இவை அனைத்திற்கும் மேலாக ரவுடி விகாஸ்துபேவின் கட்டுப்பாட்டில் இருந்த சவுபேர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 68  போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்தார். அதன் பிறகு புதியவர்களை நம்பிக்கையுடன் களத்தில் இறக்கினார். மத்திய பிரதேசத்தில் உள்ள தனது போலீஸ் நண்பர்களையும் உடன் இணைத்து, சிம்ம சொப்பமனாக இருந்த ரவுடிக்கும்பலை சிங்கமாக நின்று வேட்டையாடியுள்ளார் என்று பெருமிதம்  கொள்கின்றனர் அவர்கள். இதேபோல் சின்னதண்டா கிராம மக்களும் தினேஷ்குமாரின் அதிரடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: