என்ன நடக்கிறது இங்கு?... நாட்டை ஆள்வது யார்?... நீதிபதிக்கே மிரட்டலா?...: சாத்தான்குளம் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இதில் நீதிபதி விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: