சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று 2-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்; தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறை...!!

சென்னை: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று 2-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா  பரவலை தடுக்கும் வகையில் இன்று ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் மேலும் வேகம் எடுத்துள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகள் தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வருகிற 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகளில் பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள்  இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. ஓட்டல்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று 28ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் இல்லாத தீவிர ஊரடங்கு 2-வது முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில்  அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகள், பத்திரிகை அலுவலகங்கள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராத வண்ணம் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் “ட்ரோன்” காமிரா மூலம்  அனைத்து தெருக்களும் கண்காணிக்கப்படுகிறது. கடந்த 21ம் தேதி முதல் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: