கிளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் இதுல ஒண்ணு படிச்சிருந்தா போதும் ஊரடங்கிலும் வேலை கிடைக்கும்

 * சோர்ந்து போகாதீங்க  

 * புது உலகம் காத்திருக்கு      

கொரோனா ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில் துறையும் வீழ்ந்து கிடக்கிறது. இருப்பவர்களுக்கே வேலை இல்லை; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை. ஆனால் ஒரு சில துறைகளில் மட்டும் கவனிக்கத்தக்க வகையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

வேலைவாய்ப்பு இணையதளங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்டிஸ்ட் நிபுணர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பிசினஸ் அனலிஸ்ட் பணிக்கு கடந்த ஒருசில மாதங்களில் மட்டும் சுமார் 50 முதல் 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் நிறுவன தேவைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களே இவற்றிற்கு காரணம்.

இதுபோல் புல் ஸ்டேக் டெவலப்பர் படித்தவர்களுக்கும்  தேவை ஏற்பட்டுள்ளது.  ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு அனலிஸ்ட் பணிக்கு கடந்த சில மாதங்களாக சரியான டிமாண்ட் உள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை சாப்ட்வேர் மேம்பாடு பணிகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்த பணிக்கு மேற்கண்ட காலகட்டத்தில் வேலைவாய்ப்பு 13% அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, சைபர் தாக்குதல்களை முறியடிக்கவும் கட்டுப்படுத்தவும் சைபர் பாதுகாப்பு வேலைக்கு தேவை சுமார் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. கிளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங் பணிகளுக்கும் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. கிளவுட் கம்ப்யூட்டிங் படித்தவர்களுக்கு உலக அளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.

இன்டர்நெட் ஆப் திங்ஸ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இந்த ஆண்டில் சுமார் இரண்டு லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: ஊரடங்கு காலத்தில் கூட அத்தியாவசிய பணியாக சில சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கின. பணிச்சூழல் மாற்றங்கள் காரணமாக சில பணிகளில் ஆட்கள் தேவை அதிகரித்ததை காண முடிகிறது. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கிளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணிகளுக்கு தேவை உயர்ந்துள்ளது.

மேற்கண்ட பணிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களில் திறமை படைத்தவர்களை நிறுவனங்கள் கைவிட விரும்புவதில்லை. எனவே ஊரடங்கு காலத்துக்கு பிறகு உருவாகும் பணி மாற்ற சூழலில் மேற்கண்ட படிப்புகள் முடித்து திறமையை வளர்த்துக் கொண்டவர்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றே கூறலாம். உலகம் புதிய மாற்றத்துக்கு தயாராகிவிட்டது. அதற்கேற்ப நாமும் தயாராக வேண்டும் என்றனர்.

Related Stories:

>