வங்கிகள் திருத்த சட்டம் 2020; கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவரச சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..!!

புதுடெல்லி: மக்களின் பணம் சுருட்டப்படுவதை தடுக்க, கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் 1,482 கூட்டுறவு  வங்கிகள், 58 பன்மாநில கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. ஆனால், இவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பிலோ, கட்டுப்பாட்டிலோ கிடையாது. மகாராஷ்டிராவில் செயல்படும் ‘பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி’யில் கடந்தாண்டு  பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்தது. இதனால், பணத்தை இழந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 24-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், பல மாநில கூட்டுறவு  வங்கிகள் ஆகியவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு பேட்டி அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த  பேட்டியில், ‘‘அரசின் இந்த முடிவால், மக்களின் முதலீட்டு பணத்துக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். இதற்கான அவசரச் சட்டம் விரைவில் வெளியிடப்படும்,’’ என்றார்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவரச சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 என அழைக்கப்படும் என  தெரிவித்துள்ளார். இதன்மூலம் இன்று முதல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் வந்துள்ளது.

Related Stories: