வங்கக்கடலில் உருவாகும் தீவிர புயல்.. 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்!!

சென்னை : சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (மே 24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதற்கு ஓமன் நாடு ‘ரெமல்’ எனப் பெயர் வழங்கியுள்ளது. இது வங்கதேசத்துக்கு அருகே தீவிர புயலாகவே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதை எச்சரிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெமல் புயலால் மேற்கு வங்கம் நோக்கி செல்லும் என்பதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காற்றில் ஈரப்பதம் குறைந்து அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கக்கடலில் உருவாகும் தீவிர புயல்.. 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்!! appeared first on Dinakaran.

Related Stories: