இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 57.43%-ஆக உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 13,012 பேர் குணமடைந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 2,71,696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும் இந்தியாவில் குணமடைவோர் சதவிகிதம் 57.43%-ஆக உள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 14,894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 73, 792 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து இந்த  வரிசையில் டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 70,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,365 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 41,437 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 67,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 866 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,763 பேர்  குணமடைந்துள்ளனர். மேலும் உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories: