இந்தியா- சீனா இடையேயான மோதல் எதிரொலி; எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்; முப்படைகளும் தயார் நிலையில் இருக்க ராஜ்நாத் சிங் உத்தரவு...!

டெல்லி: முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக  நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017ல் சிக்கிம் மாநிலம் டோக்லாமில் இரு நாட்டு படைகளும் நேருக்கு நேர் சந்தித்து 73 நாட்கள் பதற்றம் நீடித்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு  லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா  ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். மேலும் 4  இந்திய வீரர்கள் கவலைகிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர்  என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு  இந்தியா - சீனா ராணுவம் இடையேயான மோதலில் உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, லடாக் எல்லை ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும்  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை சந்தித்து விளக்கினார். பின்னர் மீண்டும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், லடாக் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் வெளியுறவுத் துறை அமைச்சர்  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தின்போது, முப்படைகளும் தயார் நிலையில் இருக்க ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.  மேலும், எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், பாதுகாப்பு தேவையான இடத்தில் கூடுதல் படைகளை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: