தத்தளிக்கும் ஆட்டோ, டாக்சி, லாரி, தனியார் வாகன தொழில்கள் திக்கு தெரியாத காட்டில் திசை தெரியாத பயணம்

* ஊரடங்கு தளர்த்தியும் இயங்க வழியில்லை

* தினமும் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

* பரிதவிப்பில் போக்குவரத்து தொழில்

எத்தனையோ பேரிடர்களை சமாளித்த தொழில்துறைகளுக்கு, கொரோனா பெரும் சவாலாகிவிட்டது. எந்த நேரமும் பரபரப்பாக இருக்கும் நகரங்களின் அடையாளமே வாகன பெருக்கம்தான். சொந்த வாகனங்கள் வைத்திருந்தாலும், இன்னமும் பொது போக்குவரத்தையும், டாக்சி உள்ளிட்ட டிராவல்ஸ் சேவைகளையும் நம்பியுள்ளவர்கள் ஏராளம்.   இதுபோல், அத்தியாவசிய பொருட்கள் சப்ளையில் கனரக வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், இயங்கியவை மிக சொற்பம்தான். மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய பிறகு, போக்குவரத்துக்கு தேவையே இல்லை என்று ஆகிவிட்டது.

 கொரோனாவின் கோரத்தாண்டவம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர வைத்ததோடு, சீரான போக்குவரத்தையும் சீர்குலைத்துள்ளது. தமிழகத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இடம் எடுத்துச் செல்லும் 4.5 லட்சம் லாரிகள், அரசு பஸ்களுக்கு இணையாக இயங்கிய 4,500 தனியார் பஸ்கள், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்பட்ட 1,700 தனியார் ஆம்னி பஸ்கள், 1,500 டூரிஸ்ட் பஸ்கள், 4 லட்சம் டாக்சிகள்,  10 லட்சம் ஆட்டோக்கள் என்று சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருந்த அனைத்து மோட்டார் வாகனங்களின் இயக்கமும் அடியோடு நின்று போனது.

  இதில் லாரித் தொழிலை நம்பியிருந்த உரிமையாளர்கள் மட்டுமன்றி டிரைவர்கள், கிளீனர்கள், லோடுமேன்கள், புக்கிங் ஏஜெண்டுகள், பட்டறை தொழிலாளர்கள் என்று 20க்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்கள் சுமார் ஒரு கோடி பேர், வேலையின்றி வருமானம் இழந்து பரிதவித்து நிற்கின்றனர். தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையிலும் போதிய ஆர்டர்கள் கிடைக்காததால், லாரிகளின் இயல்பான ஓட்டம் தடைபட்டுள்ளது.

 இதேபோல் தனியார் பஸ்களை நம்பி வாழ்க்கை நடத்தும் 1.20 லட்சம் தொழிலாளர்கள், ஆம்னி பஸ்களை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பிழைப்பு நடத்தி வந்த 70 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள், டாக்சி ஓட்டி பிழைப்பு நடத்தும் 6 லட்சம் குடும்பங்கள், ஆட்டோக்களை நம்பி வாழும் 20 லட்சம் ஏழை தொழிலாளர்கள் என்று 2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது.

 ஊரடங்கால் லாரிகள் இயங்காததால், இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2,200 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் மாதத்திற்கு தலா 500 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள்.  ஆம்னி பஸ்களை பொறுத்தவரை இப்போது இயக்குவதற்கு சாத்தியமில்லை. ஊரடங்கால் எங்களுக்கு இதுவரை 600 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 3 மாதமாக நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் சரிபார்த்து இயக்க குறைந்த பட்சம் 1 லட்சம் செலவாகும்’ என்பது அவர்களின் குமுறலாக உள்ளது. இதேபோல் டாக்சிகள், ஆட்டோக்கள், டூரிஸ்ட் பஸ்கள் இயக்கப்படாததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 ‘‘தற்போது  பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தனியார் பஸ் பஸ்களை  இயக்குவதில் பல்வேறு சிக்கல் உள்ளது. மண்டலம் விட்டு மண்டலம் இயக்க அரசு  அனுமதிக்கவில்லை.  அதே போல் 30 முதல் 32 பேரை மட்டுமே வைத்து பஸ்சை இயக்க  வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம்  ஏற்படும். இதன்காரணமாகவே தமிழகத்தில் இதுவரை தனியார் பஸ்கள் இயக்கப்படாமல்  உள்ளது,’’என்கின்றனர் தனியார் பஸ் உரிமையாளர்கள்.  இந்நிலையில் கொரோனா ஊரடங்கால்,பாதிக்கப்பட்ட தொழில்களை மேம்படுத்த மத்திய அரசு 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் இந்த சிறப்பு திட்டத்தில் லாரிகள், பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்களை ஆதாரமாக கொண்டு செயல்படும் போக்குவரத்து தொழிலுக்கு எவ்வித சலுகையையும் அளிக்கவில்லை என்பது பெருத்த வேதனைக்குரியது.

இந்திய பொருளாதாரத்தின் இதயமாக நிற்கும் இந்த வாகனங்கள் மீண்டும் சீராக ஓடினால், கோடிக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களுக்கு புதுவாழ்வு கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் திட்டங்களையும், சலுகைகளையும் செயல்படுத்த முன்வர வேண்டும் என்பதே, போக்குவரத்து துறையைச் சார்ந்த ஒட்டு மொத்த பேரின் கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் லாரிகள் 12,34,360

இதில் சென்னையில் 5,607, வேலூர் 4,375, சேலம் 16,754, நாமக்கல் 16,173, தர்மபுரி 3,452, கிருஷ்ணகிரி 1,934, கரூர் 2,072, கோவை 4,961 என்று 31 மாவட்டங்களில் 81,466  லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர டிரெய்லர்கள், மணல் லாரிகள்,  டிராக்டர்கள் என்று லாரி சார்ந்த மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 360  வாகனங்கள் தமிழகத்தில் உள்ளன.

தனியார் ரூட் பஸ்கள் 7,861

இதில் சென்னையில்  6, வேலூர் 452, சேலம் 499, நாமக்கல் 373, தர்மபுரி 281, கிருஷ்ணகிரி 149,  திருச்சி 496, கோவை 447, மதுரை 201, திண்டுக்கல் 541, நெல்லை 268 என்று 31  மாவட்டங்களிலும் 7,861 பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 4,218 மினி  பஸ்கள் இயங்கி வருகிறது. 1.20 லட்சம் வாடகை கார்கள்  பதிவு  செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்கள் 14,143

(இதில், சென்னையில்  1,677, காஞ்சிபுரம் 4,666, வேலூர் 468, சேலம் 112, நாமக்கல் 211,  கிருஷ்ணகிரி 219, கோவை 464, மதுரை 254 என்று அனைத்து மாவட்டங்களையும்  மையமாக கொண்டு மொத்தம் 14,143 வாகனங்கள் இயக்கப்படுகிறது.)

ஆட்டோக்கள் 2,51,056

(இதில், சென்னை  78,352, கோவை 10,585, சேலம் 5,521, திருச்சி 13,002, வேலூர் 16,747, மதுரை  14,686, நெல்லை 11,475, கன்னியாகுமரி 8,083 என்று மாநிலம் முழுவதும் 2  லட்சத்து 51 ஆயிரத்து 56 பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.)

சொற்ப வருமானம்

செலவுக்கு போதாது

டாக்சி  சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள  பெரும்பாலான டாக்சி டிரைவர்கள் வாடகை கார்களையே ஓட்டி வருகின்றனர். 30  சதவீதம் பேர் வங்கிகளில் கடன் வாங்கியும் கந்துவட்டிக்கு பணம் பெற்றும்  சொந்த டாக்சி வாங்கி ஒட்டி குடும்பம் நடத்தி வருகின்றனர். கடந்த  2 மாதங்களுக்கும் மேலாக நீடித்த கொரோனா ஊரடங்கால் சவாரி இல்லாமல்  கஷ்டப்படுகின்றனர். கால் டாக்சி நிறுவனங்கள், தற்போதுள்ள கட்டணத்தை, 50  சதவீதம் உயர்த்த வேண்டும்,’’ என்றனர்.

காப்பீடு செலுத்த கூடுதல் அவகாசம் தேவை

‘‘லாரிகளை  புதுப்பித்து, காப்பீடு செலுத்த செப்டம்பர் 2020 வரை கால அவகாசம் வழங்க  வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க  வேண்டும். இந்தியா முழுவதும் 354 சங்கச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி,  கொள்ளையடித்துக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என்கின்றனர்,’’ லாரி  உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள்.

மாதம் தோறும் 7,500 நிவாரணம் வேண்டும்

‘‘தினமும்  500 முதல் 800 வரையில் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் டிரைவர்கள், டீசல்  மற்றும் வாகன பழுது பார்ப்பிற்கு 300 வரை செலவு செய்கின்றனர். அதிலும்  பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள், வாடகை அடிப்படையில் ஆட்டோக்களை இயக்கி  வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழலில் 2பேரை மட்டுமே ஆட்டோக்களில் அமர்த்தி  பயணிக்க வேண்டும் என்பது தர்மசங்கடமானது. டீசல் செலவோடு ஒப்பிடுகையில்  எங்களுக்கும் பெருத்த நஷ்டமே ஏற்படுகிறது,’’ என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரியுள்ளனர்.

20 பேருக்கான வரி என்றால் நாங்க ரெடி

ஆம்னி  பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஆம்னி பஸ்களை இயக்குவது  குறித்து, இதுவரை அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆம்னி பஸ்களில், 40  பேர் பயணிப்பதற்கான வரி செலுத்தப்படுகிறது. அதனால்,25 பயணிகளை ஏற்ெகனவே  உள்ள கட்டணத்தில் ஏற்றிச் சென்றால், பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, 20  பயணிகளுக்கான வரியை மட்டும் அரசு வசூலிக்க வேண்டும். தெளிவான வழிமுறைகளை  அரசு அறிவிக்க வேண்டும் என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும்  கமிஷனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை,’’ என்றனர்.

Related Stories: