காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 9 மணிக்கு திறக்கிறார்..!!

மேட்டூர்: காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக, மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 9 மணிக்கு திறந்து வைக்கிறார். மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம் பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஜனவரி 28ம் தேதி வரை 230 நாட்களுக்கு, 330 டி.எம்.சி. தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால், தண்ணீர் தேவை குறையும்.

மேட்டூர் அணையின் 87 ஆண்டு கால வரலாற்றில், குறித்த நாளான ஜூன் 12ம் தேதியில் 15 ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 11 ஆண்டுகள் ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்காததால், தமிழகத்தில் முப்போக சாகுபடி என்பது இருபோகமாகவும், ஒருபோகமாகவும் மாறி வருகிறது.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்  13ம் தேதி, 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 304வது நாளாக 100 அடிக்கும் குறையாமல் நீடிப்பது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. கடந்த 2005-2006-ம் ஆண்டு, தொடர்ந்து 427 நாட்கள் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பாண்டு டெல்டா குறுவை சாகுபடிக்கு நாளை (ஜூன் 12ம் தேதி) காலை 9 மணிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயர்த்தி தண்ணீரை திறந்து வைக்கிறார். இதில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பாதுகாப்பு போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

மேட்டூர் அணையில் நீர்திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வருவதையொட்டி மாவட்ட எஸ்பி தீபாகனிகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அனைவருக்கும், மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இப்பரிசோதனையில், போலீசாருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்த பிறகு, பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதே போல், அணை பகுதி முழுவதும் நகராட்சி வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories: