நாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

சேலம் : நாட்டுக்காக தனது கணவர் உயிரிழந்தது பெருமை அளித்தாலும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் பேரிழப்பு என்று காஷ்மீரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.இதனையடுத்து, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார்.அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹவில்தார் மதியழகன், சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர்தியாகத்தை நாடு மறக்காது என்று கூறியுள்ளார். மதியழகன்  உடலுக்கு இன்று மாலை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.இந்த நிலையில், தங்கள் குடும்பத்தின் நிலையை கருதி தனக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கவும் மதியழகனின் மனைவி தமிழரசி அரசுக்கு கோரி உள்ளார். தன் கணவரின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து அழுது கொண்டிருக்கும் தமிழரசி, ``இனி என் குழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணுமுன்னு கேட்டால் நானென்ன பதில் சொல்லுவேன். கனவுல வந்துட்டு போன மாதிரி உள்ளாட்சித் தேர்தலுக்கு வந்து ஓட்டு போட்டுட்டு லீவுக்கு வர்றேன்னு உடனே கிளம்பிப் போயிட்டாரு. இனி என்றைக்கு என் வீட்டுக்கு வருவார்? எனத் தேம்பி தேம்பி அழுதார்.ராணுவ வீரரின் மரணத்தால் அந்தப் பகுதியே சோகமயமாக காட்சி அளிக்கிறது.     

Related Stories: