கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை கிராமத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: விவசாயிகள் பீதி,.. வேளாண் அதிகாரிகள் இன்று ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தில் நேற்று ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்ததால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். இவை வடமாநிலங்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளா என்பதை இன்று ஆய்வு செய்யவுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்தன. வெளி நாடுகளில் இருந்து வந்த இந்த வெட்டுக்கிளிகள், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழக விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஆந்திரா, கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நேரலகிரி ஊராட்சியில் வாழைமரங்கள், எருக்கஞ்செடிகள், ஆமணக்கு  செடிகளில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் நேற்று மாலை படர்ந்திருந்தன. இந்த வெட்டுக்கிளிகள் இருந்த செடிகளில் இலைகள் எதுவும் இல்லாமல் மொட்டையாக காட்சியளித்தன.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இரவு நேரமானதால் அதிகாரிகளால் அங்கு செல்ல முடியவில்லை. வேளாண்மைத்துறை அதிகாரிகள் இன்று (30ம் தேதி) அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், பயிர்களை ஒட்டுமொத்தமாக நாசப்படுத்த கூடிய வெட்டுக்கிளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த தகவலால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

 இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் இதுபோன்ற வெட்டுக்கிளிகளை நாங்கள் இதற்கு முன் பார்த்ததே கிடையாது. திடீரென பார்த்தபோது, செடிகளில் கூட்டம் கூட்டமாக படர்ந்திருந்தது.இந்த வெட்டுக்கிளிகள் இருந்த செடிகளில் ஒரு இலைகூட இல்லாமல் மொட்டையாக இருந்தது அதிர்ச்சியை தருவதாக உள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் வடமாநிலத்தில் பயிர்களை நாசம் செய்த வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, எங்கள் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த வெட்டுக்கிளியின் நிறத்தை பார்க்கும்போது, வடமாநிலத்திற்குள் வந்ததை போன்றுதான் தெரிகிறது. இருந்தாலும் உடனடியாக உறுதிபடுத்த முடியவில்லை. இன்று அந்த வெட்டுக்கிளியை பிடித்து, பெங்களூருவில் உள்ள வேளாண்மை ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகுதான் வெளிநாடுகளில் இருந்து வந்தவையா என உறுதி செய்யப்படும்’ என்றனர்.

Related Stories: