சென்னை : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜிபே, ஃபோன்பே உள்ளிட்டவை மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வங்கி ஊழியர்களுக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சென்னையில் நகை அடகு கடைகள், திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
*அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு அரசியல் கட்சியினருக்கு முறைகேடாக உதவினால் உரிமம் ரத்து செய்யப்படும்.
*அடகு வைத்த நகைகளை திருப்ப வாக்காளர்களுக்கு டோக்கன், அடையாள வில்லைகள் வழங்கினால் ஏற்கக் கூடாது.
*மொத்தமாக அடகு வைத்த நகைகளை திருப்ப எவரேனும் முற்பட்டால் தகவல் தர வேண்டும்.
*திருமண மண்டபம், கூட்ட அரங்கில் வெளியூரில் இருந்து கூட்டமாக வந்து தங்க அனுமதி வழங்கக் கூடாது.
*மண்டபத்தில் அரசியல் கூட்டங்கள் நடத்த பதிவு செய்யப்பட்டால் தேர்தல் அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
*புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே விடுதிகளில் தங்க அனுமதிக்க வேண்டும்.
*ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் பணிகளுக்கு செலவிட முடியும்.
*வேட்பாளரின் செலவுகள் தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
