கூடலூர் அருகே முதுமக்கள் தாழி, பானை கண்டெடுப்பு: கீழடியை போலவே அகழாய்வு நடத்த வலியுறுத்தல்

கூடலூர்: கூடலூர் அருகே விவசாய நிலத்தை சமன்படுத்தும்போது முதுமக்கள் தாழி, பானை உட்பட பழங்காலப் பொருள்கள் கிடைத்தன. எனவே, இப்பகுதியில் கீழடியை போல அகழாய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ளது குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமம். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள இப்பகுதியில், பெருமாள்கோவில் அடிவாரம் மட்டப்பாறை புலம் பகுதியில் அம்மாவாசி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது குடும்பத்தினர் உழுது சீர்படுத்தும்போது முதுமக்கள் தாழி தென்பட்டது.தாழியின் உள்ளே மனித எலும்புகள், ஜாடி, சிறுசிறு மண்பாண்டங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து அம்மாவாசியின் மகள் பிரவீணா, தேனியிலுள்ள வைகை தொல்லியல் கழக அமைப்பாளருக்கு தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், தொல்லியல் அமைப்பினர் அப்பகுதிக்கு வந்து தாழி உள்ளிட்ட பொருள்களை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வைகை தொல்லியல் கழக அமைப்பாளர் மோகன் குமாரமங்கலம் கூறுகையில், ‘‘தாழி வகை அடக்கம் என்பது பொதுவாக 2,500 ஆண்டுகள் பழமையானது. இங்கிருந்து எடுக்கப்பட்ட தாழியில் புதைக்கப்பட்டவரின் எலும்புகளும், ஈமக்காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களும்  கிடைத்துள்ளன. தாழியின் உள்ளே இருந்த பானைகள் வேதிவண்ணம் பூசப்பட்ட பானைகளாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 10 ஏக்கர் நிலப்பரப்பு ஈமக்காடாக (சுடுகாடு) இருந்துள்ளது. இவ்வளவு பெரிய ஈமக்காடு இருந்தால் இப்பகுதியில் மிகப்பெரிய குடியிருப்பு இருந்திருக்க வேண்டும். இதன் அருகே ஆய்வு செய்தால், நிச்சயமாக  கீழடியைப்போல ஒரு நகரத்தை கண்டுபிடிக்க முடியும்.ஏற்கனவே இதனருகே உள்ள பகுதிகளான சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கூடலூர் திரள்மேடு, தம்மணம்பட்டி பகுதியில் நடத்திய களஆய்வுகளில் கத்திகள், வாள்கள், இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, இது இரும்பு காலத்தைச் சேர்ந்தது.

இந்த மட்டப்பாறை பகுதி குடியிருப்புகள் அனைத்தும் ஆற்றங்கரையோரங்களிலும், மலையடிவாரங்களிலும் தான் அமைந்துள்ளது. இதனால் பாண்டிய நாட்டிற்கும், சேர நாட்டிற்குமான ஒரு வணிகவழி இந்த ஊர்களின் வழியாக போயிருக்க வேண்டும். அதுபோல் கூடலூரின் அருகே உள்ள எள்ளுக்காட்டுப்பாறை பகுதியில் சமண கோயில்களும், ஆதாரங்களும் உள்ளன. கண்ணகி கோயிலின் அடிவாரப்பகுதியில் ஈமச்சின்னங்கள் கிடைத்திருப்பது, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வளமான சமூகம் இப்பகுதியில் இருந்ததற்கான ஆதாரமாக உள்ளது. எனவே, இங்கு கீழடியை போல அகழாய்வு நடத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: