இந்தியளவில் பாதிப்பில் தொடர்ந்து முதலிடம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு...முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 52 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது.  கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தி இந்தியா உலகளவில் 11-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, மே 17ம் தேதிக்கு பிறகான திட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8  மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும் என்றார். அதன்படி, 4-ம் கட்ட ஊரடங்கு நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடுகிறது. இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இதுவரை 30,706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1135 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7088 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில், நேற்று 3-வது இடத்தில் இருந்த குஜராத் மாநிலம் மீண்டும் இன்று 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: