சொந்த ஊர்களுக்கு செல்லும்போது பயங்கரம்: லாரி மீது டிரெய்லர் மோதி 24 தொழிலாளர்கள் பரிதாப பலி: மேலும் 36 பேர் படுகாயம்

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது டிரெய்லர் மோதியதில் இரு வாகனங்களிலும் பயணம் செய்த 24 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியானார்கள்.  கடந்த மாதம் தொடங்கிய நாடு தழுவிய கொரோனா ஊரடங்கால்,  ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். வேலை, வருமானம் இல்லாததால் இவர்களில் பலர் சைக்கிள், மாட்டு வண்டி, இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். மேலும், பல தொழிலாளர்கள் குடும்பத்துடன் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக ஷராமிக் சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும். இது குறித்த தகவல்கள் மற்றும் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், சிலர் கிடைக்கும் வாகனங்களில் உயிரை பணயம் வைத்து சொந்த ஊரை சென்றடைகின்றனர். இவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக ஆங்காங்கே விபத்துக்களில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.  இதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 24 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் டிரெய்லர் ஒன்றில் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றனர். இதில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.

இதேபோல், டெல்லியில் இருந்து லாரி ஒன்றில் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், அவுரியா மாவட்டம் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து வந்தவர்கள் டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தினர். அப்போது, ராஜஸ்தானில் இருந்த வந்த டிரெய்லர், அந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.  இந்த விபத்தில் 24 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 36 பேர் காயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்கள் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த 36 தொழிலாளர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் எடாவா மாவட்டம் சைபையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 22 பேர் அவுரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  2 லட்சம் நிதியுதவி: விபத்தில் இறந்தவர்களுக்கு உத்தரப் பிரதேச அரசு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளது.

மிகவும் துயரமானது: தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடி: இந்த விபத்து மிகவும் துயரமானது. அரசு நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி: உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு துயரமுற்றேன். உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி: தொழிலாளர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு அரசு ஏன் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற கேள்வியை இதயத்தை நொறுக்கும் இந்த சம்பவம் மீண்டும் எழுப்பி உள்ளது.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்: அனைத்தையும் தெரிந்தும், அனைத்தையும் பார்த்தும் இதயமற்றவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் இந்த அலட்சியத்தை எத்தனை காலம் நியாயப்படுத்துவார்கள் என பார்க்கலாம். இவை விபத்துக்கள் இல்லை. கொலைகள். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி: மத்திய, மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகள் இந்த நெருக்கடியான நிலையில் அரசியல் செய்வதை தவிர்த்து,  ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ம.பி.யில் 8 பேர் விபத்தில் மரணம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த 8 வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலியாகினர்.

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 6 பேரும்,  குணா மாவட்டத்தில் வேன் கவிழ்ந்த‍தில் ஒருவரும், பர்வானி மாவட்டத்தில் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஒரே வாரத்தில் 100 பேர் பலி

* கடந்த ஒரு வாரத்தில் இது போன்ற விபத்துக்களில் சிக்கி 100 வெளிமாநில தொழிலாளர்கள் பலியாகினர்.

* கடந்த 8ம் தேதி தண்டவாளத்தில் தூங்கிய தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழந்தனர்.

* இந்த வாரத்தில் இது போன்ற பல்வேறு விபத்துக்களில் 15 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

* கடந்த 9ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் லாரி விபத்துக்குள்ளானதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: