10-ம் வகுப்பு தேர்வு எதிரொலி: ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் பணிபுரியும் பள்ளி சார்ந்த மாவட்டத்திற்கு 21-ம் தேதிக்குள் வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால், மீண்டும் தேர்வுகள் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் 19ம் தேதி தொடங்கிய நிலையில் அந்த பணியும் பாதியில் நின்றது. தற்போது பிளஸ் 2 விடைத்தாள்  திருத்தும் பணிகளையும் மே 27ம் தேதி தொடங்க அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.

தொடர்ந்து, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும்.  பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த தேர்வு  ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். அதேபோல 34 ஆயிரத்து 842 மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் 24ம் தேதியில் நடந்த தேர்வை எழுத முடியாமல் போனது. அதனால், அந்த மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதி  தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜூன் 1 முதல் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளிலேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும். அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும்( தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020-ற்குள் வந்து இருக்க வேண்டும்.

அதனை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை 11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தற்போது தான் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் அடங்கிய பள்ளி குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது இருப்பின் அதன் விவரங்களை நாளை (16.05.2020) மாலை 5 மணிக்குள் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு tn e-pass ஆன்லைன் வழியாக உடன்  விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத்தையும் சார்ந்த மாவட்ட  கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: