அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது டாஸ்மாக் கடை திறக்க தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

* இன்று முதல் மது விற்பனை

புதுடெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதையொடுத்து, இன்று முதல் மதுபான விற்பனையை தொடங்க டாஸ் மாக் நிர்வாகம் முடிவெடுத்துள் ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளை மே 7ம் தேதி முதல்  திறக்க தமிழக அரச  உத்தரவிட்டது. இந்த உத்தரவை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறியதால்  திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனடியாக மூடுமாறு  அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 8ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஷ்வர ராவ், சஞ்சய் கிஷன் கவுல், சகாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி ஆஜராகி, மதுபான விற்பனை என்பது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. உரிய விதிமுறைகளை பின்பற்றியே மது விற்பனை தொடங்கப்பட்டது. அனைத்து கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. ஆன்லைனில் மது விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை, மது கடத்தல் ஆகியவை ஏற்படும்.

எனவே, ஆன்லைன் மது விற்பனைக்கு சாத்தியம் கிடையாது. மாநில எல்லை பாதுகாப்பும் மிக அவசியமாக கருதப்படுகிறது. அண்டை மாநிலங்களில் மது விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில எல்லைகளில் உள்ள கடைகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும். மது வாங்க டிஜிட்டல் முறை பயன்படுத்தப்படுகிறது. மது வாங்குபவர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடும் போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மது விற்பனை செய்வது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு விட்டு தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அது முடியாது என்று சொல்கிறது. தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருப்பதுதான் பிரச்னை என்று வாதிட்டனர்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 8ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதில் தர வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். உச்ச நீதின்ற உத்தரவை தொடர்ந்து இன்று முதல் மதுபான விற்பனையை தொடங்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு தகவலால் ஐகோர்ட் விசாரணை தள்ளிவைப்பு

நேற்று காலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கை தள்ளி வைக்குமாறு நீதிபதிகளிடம் அட்வகேட் ஜெனரல் கோரினார். அப்போது, உச்ச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு விவரம் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

நாடு முழுவதும் மதுவிலக்கு

கோரியவருக்கு 1 லட்சம் அபராதம்

டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஷ்வர ராவ், சஞ்சய் கிஷன் கவுல், சகாய் ஆகியோர் முன்பு ஒடிசாவை சேர்ந்த சிங் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அவர், மனுவில், நாடு முழுவதும் மது விலக்கை கொண்டுவருமாறு உத்தரவிட கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், நிர்வாக ரீதியான கொள்கை முடிவு நடவடிக்கையில் உத்தரவிட கோர முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கை தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதத்தையும் நீதிபதிகள் விதித்தனர்.

Related Stories: