கொரோனா முகாமில் டாக்டர்கள் புறக்கணிப்பால் டெல்லியில் 2 தமிழர்கள் இறந்துள்ளனர்: சிறுபான்மை ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி கொரோனா முகாம்களில் சரியான சிகிச்சை அளிக்காததால் 2 தமிழர்கள் இறந்துவிட்டனர் என்று முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிறுபான்மை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. டெல்லி கவர்னர் அனில் பைஜால், முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மற்றும் சிறுபான்மை கமிஷன் உறுப்பினர்  கர்தார் சிங் கோச்சார் இணைந்து எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள  கொரோனா வைரஸ் சந்தேக நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில்  “அவல நிலை” நீடிக்கிறது. இதுபோன்ற  தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்  போன்றவற்றில் உள்ள ஒழுங்கற்ற முறையாலும், உணவு வழங்கலில் உள்ள தாமதம், அதிகாரிகள் மற்றும்  மருத்துவர்களின் கடுமையான நடவடிக்கை, ஒத்துழையாமை காரணமாக இரண்டு நோயாளிகள்  இறந்துவிட்டனர்.

சுல்தான்புரி, நரேலா மற்றும் துவாரகாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட  மையங்களில் தமிழ்நாடு, கேரளா, உ.பி., ராஜஸ்தான்  மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த  வெளிநாட்டவர்களும் உள்ளனர். இதில் சிலர் கொரோனா அறிகுறியுடன் உள்ளனர். அவர்கள் 25 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு  செய்துள்ளார்கள். மருத்துவரீதியாக தேவையான 14 நாட்களையும் நிறைவு  செய்துள்ளனர். இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு ேகாவிட்-19 நோய் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகளும் தெரிவிக்கின்றன.  ஆனால் நோய் பாசிட்டிவ் நபர்களும் இதே மையத்தில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுல்தான்புரி முகாமில் உள்ள ஜமாத்  உறுப்பினர்களில் 21 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது.

ஆனால்,  இதுபோன்று பாசிட்டிவ் என  வந்தவர்களில் சுமார் 4 முதல் 5 பேர் மட்டுமே  மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிலர் நீரழிவு  நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் என்றாலும் மருத்துவ வசதிகள் மற்றும்  மருந்துகள் வழங்கப்படவில்லை. சுல்தான்புரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட  முகாமில் ஏற்கனவே இரண்டு நீரழிவு நோயாளிகள் இறந்துள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையால் முகமது  முஸ்தபா (60) ஏப்ரல் 22ம் தேதி இறந்தார், ஹாஜி ரிஸ்வான் சுமார் பத்து  நாட்களுக்கு முன்பு இறந்தார். நீரிழிவு நோயாளிகள் இருவரும் தமிழ்நாட்டைச்  சேர்ந்தவர்கள். எனவே, இரண்டு பேர் இறந்தது  குறித்து விசாரணை நடத்த கவர்னர் மற்றும்  முதல்வர் உத்தரவிட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: