ராணுவத்தில் 8 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 20 இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா: தொடர்புடைய சக வீரர்களுக்கும் பரிசோதனை

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 20 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால், தொடர்புடைய சக வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் இந்திய ராணுவத்தையும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களில் பலர் மீண்டு வருவதாக ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: ‘நாங்கள் ஏற்கெனவே இரண்டு சிறப்பு ரயில்களில் ராணுவ சேவை வழங்கியுள்ளோம். பெங்களூரு முதல் ஜம்மு வரை, மற்றொன்று பெங்களூரு முதல் கவுகாத்தி வரை.

இதுதவிர கொரோனா வைரசுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தில் களப்பணியில் அனைத்து மட்டத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இதுவரை, இந்திய ராணுவத்தில் எட்டுப் பேரிடம் மட்டும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இருவர் மருத்துவர்கள் மற்றும் ஒருவர் நர்சிங் உதவியாளர் ஆவர். இவர்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நால்வருக்கு நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர லடாக்கில் கொரோனா பாதிப்புக்குள்ளான ஒரு ராணுவ வீரர் இப்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் பணியில் இணைந்துள்ளார். எந்தவொரு பாதிக்கப்பட்ட நபருடனும் தொடர்பு கொள்ளாத ராணுவப் பணியாளர்கள் மீண்டும் அலகுகளுக்கு மாற்றப்படுகிறார்கள்.

இந்திய ராணுவத்தினரைப் பொறுத்தவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டடவர்கள் பெரும்பாலும் குணமடைந்து வருகிறார்கள். இவ்வாறு எம்.எம்.நாரவனே தெரிவித்தார். இந்நிலையில், மும்பையில் உள்ள ஒரு கடற்படை தளத்தில் பணியாற்றும் 20 கடற்படை வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. முதல் பாதிப்பு ஏப். 7ம் தேதி அங்குள்ள ஐ.என்.எஸ் ஆங்கர் தளத்தில் பணியாற்றிய ஒரு வீரருக்கு கண்டறியப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட மற்ற அனைத்து நபர்களும் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: