செங்கோட்டை வழியாக கேரளத்திற்கு மினி லாரியில் கடத்தப்பட்ட 670 கிலோ கருவாடு பறிமுதல்: கெட்டுப்போனதால் குழி தோண்டி புதைப்பு

செங்கோட்டை:   தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு உணவு கட்டுப்பாடு துறையின் பதிவு சான்று இல்லாமலும், கெட்டுப்போன நிலையிலும் லாரிகளில் கொண்டு செல்லும் பொருட்களை அம்மாநில சுகாதாரத்துறையினரும், போலீசாரும் கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர். ஒரு சிலவற்றை குழி தோண்டி புதைத்து அழித்தும் வருகின்றனர். நேற்று காலை ஸ்ரீவில்லிபுதூர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் சடயமங்கலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த மினிலாரியை செங்கோட்டை அடுத்த கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனை சாவடியில் அம்மாநில சுகாதார துறையிரும், போலீசாரும் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அந்த லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் 670 கிலோ கெட்டுப்போன கருவாடுகள்  கடத்திச் செல்லப்படுவதும். எறும்புகள் மொய்க்காமல் இருக்கும் பொருட்டு விஷ மருந்து தெளிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆரியங்காவு வனப்பகுதியில் பஞ்சாயத்து பணியாளர்கள் உதவியுடன் குழி தோண்டி புதைத்து அழித்தனர். இதனிடையே கெட்டுப்போன உணவு பொருட்களையும், உணவுப் பாதுகாப்பு பதிவு இல்லாமல் மருந்து தெளிக்கப்பட்ட உணவு பொருட்களையும்  தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு லாரிகளில் அனுப்ப வேண்டாம் என கேரளா சுகாதார துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: